Kumar

Kumar

Friday, December 16, 2016

சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?                                                     ஜோதிடத்தில் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று கிரகங்களின் பெயர்ச்சிகள் என்று சொல்லக்கூடிய கிரகங்களின் நகர்வுகள். பெயர்ச்சி என்றால் ஒரு கிரகம் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்குச் செல்வது. இந்தவகையில் சந்திரன் 2 1/4 நாட்கள், புதன் 27 நாட்கள், சூரியன்-சுக்கிரன் 1 மாதம், செவ்வாய் 45 நாட்கள், குரு ஒரு வருடம், ராகு-கேது 1 1/2 வருடம், சனி 2 1/2 வருடம் என்று இப்படி கிரகங்கள் ஒரு ராசியில் அமர்கின்றன. இவர்களில் ஒரு ராசியில் நீண்ட நாட்களாக இருப்பவர் சனி பகவான். குருவிற்கு பார்வை பலமும், சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது குரு தான் பார்க்கும் பார்வையால் சுப பலமும், சனி தான் இருக்கும் இடத்தின் மூலம் சுப பலன்களையும் கொடுப்பார்கள். பொதுவாக ஜாதகத்தில் சனி பகவான் ஆயுள், தொழில், கர்மா ஆகியவற்றை ஆள்கிறார். எனவேதான் அவர் கர்மகாரகன் - ஆயுள் காரகன் - தொழில்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பைப் பொறுத்தே கோச்சார பலன்கள் சொல்லப்படுகின்றன. தற்போது, சனிபகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் மேஷ ராசிக்கு அஷ்டமத்து சனி, ரிஷப ராசிக்கு கண்ட சனி, சிம்ம ராசிக்கு அர்த்தாஷ்டம சனி, துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி என நடக்கிறது. ஒரு ராசிக்கு அஷ்டமத்து சனி நடக்கும்போது சனி பகவான் தனது பார்வையால் அந்த ராசியின் தன - வாக்கு - குடும்ப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். கண்டச் சனி என்றால் ராசி - சுகஸ்தானம் - பாக்கியஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். அர்த்தாஷ்டம சனி என்றால் ராசி - ரோகஸ்தானம் - தொழில் ஆகியவற்றில் தன் பார்வையை செலுத்துவார். ஏழரைச் சனிக் காலம் என்பது குறிப்பிட்ட ராசிக்கு முந்தைய ராசியில் இரண்டரை வருடம், தனது ராசியில் இரண்டரை வருடம், அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என்பதாகும். ஏழரைச் சனி நடக்கும்போது முதல் இரண்டரை வருடம் விரய ராசியில் அவர் சஞ்சாரம் செய்வதால் விரயச்சனி, இரண்டாம் இரண்டரை வருடம் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஜென்ம சனி, கடைசி இரண்டரை வருடம் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் வாக்குச் சனி என்று தன் நிலைகளை உணர்த்துகிறார். சனி எல்லோரையும் கஷ்டபடுத்த மாட்டார். நீதி வழுவாமல் வாழ்கிறவர்களை சனி பகவான் நன்றாகவே வைத்திருப்பார். ஒருவருக்கு அஷ்டமத்து சனி நடக்கும்போது குடும்பம், குழந்தைகளிடம் சிறு மனஸ்தாபங்கள், தொழிலில் சிறுசிறு பிரச்னைகள் என்று கொடுப்பார். கண்டச்சனி நடக்கும்போது கவனத் தடுமாற்றம், பெற்றோருடன் சிக்கல், பொருளாதார நஷ்டம் ஆகியவை ஏற்படும். அர்த்தாஷ்டம சனி காலத்தில் சோம்பேறித்தனம் அதிகமாகுதலும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளும் ஏற்படலாம். ஏழரைச் சனியில் விரயச் சனி நடக்கும் போது காரியத்தடை, வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஜென்ம சனி காலகட்டத்தில் எதிர்மறையான எண்ணம் தோன்றுதல், எடுத்த காரியங்களில் தடை ஆகியன ஏற்படுவதோடு, உறவினர்கள் நண்பர்களிடம் கருத்து வேற்றுமை வரலாம். வாக்கு சனி நடக்கும்போது கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போதல், நேரம் தவறி நடப்பது, பண விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் சனியின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க நமது முன்னோர்கள் சில எளிமையான பரிகார முறைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் முதல் பரிகாரம் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது. குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் நல்லெண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சனி ஹோரையில் குளித்து விட்டு கிழக்கு முகமாக நின்று ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் ஒரு பாகம் எடுத்துத் தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். மீதி பாகத்தை பிரித்து உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். இது ஒரு எளிமையான பரிகாரம். அடுத்த பரிகாரம் சிறிது எள் மற்றும் நல்லெண்ணெய் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வணங்குவது. பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, பழங்கள் அளிக்கலாம். ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வது, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு புதிய உடைகள் கொடுப்பது போன்ற பரிகாரங்களை செய்து பலன் பெறலாம். எட்டு இரும்பு வளையங்களை வாங்கி சனிக்கிழமையன்று வரும் சனி ஹோரையில் (காலை 6 - 7, மதியம் 1 - 2, அல்லது இரவு - 8 - 9) ஓடும் தண்ணீர் அல்லது கடலில் தெற்கு முகமாக நின்று விட வேண்டும். இது சிறந்த தாந்த்ரீக ரீதியாகச் சொல்லப்பட்ட மிகச் சிறந்த பரிகாரம். மேலும் திருநள்ளாறு செல்வது, சிவன் ஆலயத்தில் எள்முடிச்சு தீபம் ஏற்றுவது போன்றவற்றையும் செய்யலாம். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் முன்னோர்களையும், வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் நிந்தனை செய்யாமல் இருப்பதுதான். முடிந்தவரை நேர்மையை கடைப்பிடித்தால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment