Kumar

Kumar

Friday, December 16, 2016

சர்ப்ப தோஷங்களை சீராக்கும் ராகு பகவான் : குன்றத்தூர் வகிரகங்களில் ராகுபகவானை யோகக்காரகன் என்பர். திருமணம், லாபம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, யோகா, தியானம், கெட்ட சகவாசத்திலிருந்தும், தீய பழக்கவழக்கத்திலிருந்தும் மீள்வது போன்றவற்றை அருள்பவர் ராகுபகவான். ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களை அடுக்காக சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகரிக்கும். இவை நீங்கி நிம்மதியாக வாழ குன்றத்தூர் தலத்திலுள்ள நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது. பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. அவர் சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியை தரிசிக்கும் வழக்கம் கொண்டவர். இப்படியொரு ஆலயத்தை சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார். இத்தலம் வடநாகேஸ்வரம் எனப்பட்டது. இங்கு நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன். கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள். ஆனால், குளம் திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார் கனவில் பழையபடி மூலவர் இருக்குமிடத்திலேயே நாகேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு கிடைக்க பக்தர்கள் மீண்டும் அருணாசலேஸ்வரரை பிராகாரத்திலும் நாகேஸ்வரரை மூலவராகவும் பிரதிஷ்டை செய்தனர். பிராகாரத்தில் வள்ளி-தெய்வானை-சுப்ரமணிய சுவாமியும், பிராகார முடிவில் காமாட்சி அம்மனும் தரிசனம் தருகிறார்கள். ஈசன் நாகேஸ்வரர் எனும் நாமத்தோடு, ராகுவின் அம்சத்தோடு விளங்குவதால், ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடலாம். இன்றும் சர்ப்பங்கள் இரவில் இறைவனை வழிபட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment