Kumar

Kumar

Friday, December 16, 2016

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் அதனை எப்படி தெரிந்து கொள்வது?                                                                                                                                                                 தற்காலத்தில் இந்தக் கேள்வியினைக் கேட்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்வது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. வேலைவாய்ப்பு தேடி சொந்த ஊரை விட்டு வந்தவர்கள், இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக குலதெய்வம் கோயில் பக்கம் செல்லாதவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே தங்கள் குலதெய்வத்தின் அம்சத்தினை ஒட்டிய இறை மூர்த்தங்களை வணங்குபவர்கள் என குலதெய்வத்தினை மொத்தமாக மறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஜாதகத்தில் தோஷம் எதுவும் இல்லை, ஆனால், திருமணம் தடைபட்டுக் கொண்டே செல்கிறது, உடம்பில் குறை ஏதும் இல்லை, ஆனால், என்ன காரணத்தினாலோ இன்னமும் குழந்தை பிறக்கவில்லை என்று ஏதேனும் ஒரு குறை உண்டாகும்போதுதான் நமக்கு குலதெய்வத்தின் நினைவு வருகிறது. இவ்வாறு குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் தங்கள் பங்காளிகள் அனைவரின் குடும்பத்திலும் தலைச்சன் பிள்ளை அல்லது தற்போது உயிருடன் உள்ள மூத்த பிள்ளையின் ஜாதகத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஏதேனும் ஒரு அம்சம், அதாவது, ஏதேனும் ஒரு கிரஹத்தின் அமர்வு நிலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். குறிப்பாக ஐந்து அல்லது ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி அல்லது அந்த வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரஹங்கள் ஆகியவற்றின் நிலை ஒரே மாதிரியாக இருக்கும். ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்களைக்கொண்டு குலதெய்வம் என்பது என்ன அம்சம் பொருந்தியது என்பதை ஒரு ஜோதிடரால் கணித்துச் சொல்லமுடியும். குடும்பத்தில் தலைச்சன் பிள்ளை பிறக்கும்போது ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி நீசம் பெற்றிருந்தோ அல்லது ஐந்தாம் வீட்டில் நீச பலத்துடன் கிரஹங்கள் அமர்ந்திருந்தால் குலதெய்வ வழிபாட்டினை இந்த தலைமுறையில் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு சிலர் தங்கள் குலத்திலேயே உதித்து மனிதரோடு மனிதராக வாழ்ந்து, தன் குலத்திற்காக உயிரையும் தியாகம் செய்த உத்தம ஆத்மாவை தங்கள் குலதெய்வமாக வணங்கி வருவார்கள். அத்தகைய உத்தம ஆத்மாக்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருக்கும். அத்தகைய மனிதர்களுக்காக அவரது வம்சாவளியினர், அல்லது அவரது வழியினைப் பின்பற்றி நடப்பவர்கள் கோயில் கட்டி வழிபட்டு வந்திருப்பார்கள். இத்தகைய நிலையினையும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த தலைச்சன் பிள்ளைகளின் ஜாதகத்தைக்கொண்டு தெரிந்துகொள்ள முடியும். ஜாதகத்தில் அதற்கான வழிமுறை உள்ளது. எது எப்படியாயினும் குலதெய்வ வழிபாடு ஒன்றே குறைகளைப் போக்கி நிறைவான வாழ்வினைத் தரவல்லது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

No comments:

Post a Comment