Kumar

Kumar

Friday, December 16, 2016

சங்கடங்கள் தீர்க்கும் சனி பகவான் : பொழிச்சலூர் சனி பிடிக்கிறார் என்றால் எல்லோருக்குமே கலக்கம்தான். ஆனால், ஒட்டுமொத்தமாக அப்படி பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், தர்ம நியாயங்களையும், நீதியையும் சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்பளிக்கும் நீதிதேவன் இவர். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் இவர் உச்சமாகிறார். ஆனாலும், சனிபகவானுடைய சோதனையை தாங்க முடியாதவர்களும் சனியின் எதிர்மறை பார்வை பெற்ற ஜாதகர்களும் வழிபட வேண்டிய கோயில் பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் ஆலயம். அகஸ்தியர் பொதிகை நோக்கி நதியோரமாக பயணப்பட்டபோது தர்ப்பைப் புற்களை நீரில் விட்டு விடுவாராம். எங்கெல்லாம் அவை கரை ஒதுங்குகின்றனவோ அவ்விடங்களிலெல்லாம் சுயம்புவாகவோ அல்லது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவோ லிங்கம் தரிசனம் தருமாம். அப்படி இல்லாத இடங்களில் இவரே ஒரு லிங்கத்தை நிறுவிவிட்டு தன் யாத்திரையைத் தொடர்வாராம். அப்படி அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் அமைந்த கோயில் பொழிச்சலூரில் உள்ளது. தொண்டை நாட்டு நவகிரகத் தலங்களில் சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மூலவர் சந்நதி, யானையின் பின்பக்கம் போன்ற (கஜபிருஷ்டம்) தோற்றம் உடையது. அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சற்று தள்ளி இடப் பக்கமாக ஆனந்தவல்லி தெற்குப்புறம் நோக்கியும், தனித்தனி சந்நதிகளில் அருளாட்சி செய்கிறார்கள். சனீஸ்வர பகவான் இந்த சிவனை பூஜித்து, நள்ளாறுதீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப்பெற்று, தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறார். எனவே, இவ்வூர் வடதிருநள்ளார் என்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சனியன்றும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருநள்ளாருக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோஷப் பரிகாரம் செய்து மகிழ்வோடு திரும்புகின்றனர். இங்குள்ள தீர்த்தத்திற்கும் நள்ளாறு தீர்த்தம் என்றே பெயர்.

No comments:

Post a Comment